| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.1 கோயில் (சிதம்பரம்) - பெரியத் திருத்தாண்டகம் | 
| அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
 தெரியாத தத்துவனைத் தேனை பாலைத்
 திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
 கரியானை நான்முகனைத் கனலைக் காற்றைக்
 கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
 பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 1 | 
| கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
 அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
 ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
 மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
 வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
 பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 2 | 
| கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
 வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
 வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
 அருமான வான்முகத்தா ளமர்ந்து காண
 அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
 பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 3 | 
| அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
 மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
 மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
 திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
 திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
 பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 4 | 
| அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
 வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
 வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
 பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
 பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
 பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 5 | 
| கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானை
 அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
 அருமறையோ டாறங்க மாயி னானைச்
 சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
 சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
 பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 6 | 
| வரும்பயனை எழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
 அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
 அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
 சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
 துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
 பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 7 | 
| காரானை ஈருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
 ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
 அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
 பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
 பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
 பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 8 | 
| முற்றாத பால்மதியஞ் சூடினானை மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
 செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
 திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
 குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
 கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
 பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 9 | 
| காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
 சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
 திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
 ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
 ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
 பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.2 கோயில் (சிதம்பரம்) - புக்க திருத்தாண்டகம் | 
| மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
 கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
 குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
 தங்கு மிடமறியார் சால நாளார்
 தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
 பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 1 | 
| நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள் நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
 பாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்
 பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
 வேதமும் வேள்விப் புகையு மோவா
 விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
 போகமும் பொய்யா பொருளு மானார்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 2 | 
| துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்த தூமதியும் பாம்பு முடையார் போலும்
 மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
 மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
 அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
 அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
 புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 3 | 
| வாரேறு வனமுலையாள் பாக மாக மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
 சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
 திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
 காரேறு கண்டத்தார் காமற காய்ந்த
 கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
 போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 4 | 
| காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக் கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
 ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
 உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
 சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
 திருவாரூர்த் திருமூலத் தான மேயார்
 போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 5 | 
| காதார் குழையினர் கட்டங் கத்தார் கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
 மூதாயர் மூதாதை யில்லார் போலும்
 முதலு மிறுதியுந் தாமே போலும்
 மாதாய மாதர் மகிழ வன்று
 மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்
 போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 6 | 
| இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
 பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
 பெரியான்றன் பெருமையே பேச நின்று
 மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
 மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
 புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 7 | 
| குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
 கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
 கையோ டனலேந்திக் காடு றைவார்
 நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
 நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
 புலால்வெண் டலையேந்திப் பூதஞ் சூழப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 8 | 
| சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர் சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
 பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
 படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
 வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
 மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
 பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 9 | 
| பாதங்கள் நல்லார் பரவி யேத்தப் பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
 ஏதங்கள் தீர இருந்தார் போலும்
 எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
 வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
 விடையொன்று தாமேறி வேத கீதர்
 பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
 புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
 
 | 10 | 
| பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
 சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்
 தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
 விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
 ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
 கட்டங்கங் கையதே சென்று காணீர்
 கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் |